நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது என பாதுகாப்பு தரப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர் ஒருவர் இவ்வாறான தகவலொன்று கிடைத்துள்ளதாக குறித்த சிங்கள ஊடகத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பதற்கு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னதாக அவர் நாட்டுக்கு வருகை தரவேண்டியுள்ள நிலையில் அது குறித்து தான் உறுதியாக அறிந்திருக்கவில்லை என குறித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் உரிய வீசா காலத்திற்கு மேலதிகமாக தங்கியிருப்பது தமது நாட்டுக்கு பாதுகாப்பு பிரச்சினையை உருவாக்கும் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என குறித்த முன்னிலை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.