கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கொழும்பு நகரின் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின.
மழையுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் பல நோயாளர் விடுதிகள் நீரில் மூழ்கின.
வெள்ளப்பெருக்கு காரணமாக விபத்து பிரிவின் பல மின்தூக்கிகளும் செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நோயாளிகளை வேறு விடுதிகளுக்கு மாற்றுவதற்கு வைத்தியசாலை ஊழியர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
நொரிஸ் கால்வாயின் இருமருங்கிலும் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் கடைகளில் இருந்து முறைசாரா முறையில் கால்வாயில் கழிவுகளைக் கொட்டுவது போன்ற செயல்களினாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பலத்த மழையினால் பல வீதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பின் முக்கிய வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.
மருதானை, பொரளை, பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள வீதிகள் நீரில் மூழ்கியதாகவும், இதனால் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாகவும் அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் சில மணித்தியாலங்களுக்குள் கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


