2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கத்தின் படி, ஜூலை மாதத்தில் 7.2% ஆக பதிவாகியிருந்த பணவீக்கமானது, ஓகஸ்ட் மாதத்தில் 8.1% ஆக உயர்வடைந்துள்ளது.
உணவுப் பணவீக்கமானது கடந்த ஜூலை மாதத்தில் நிலவிய 4.9% இலிருந்து ஒகஸ்ட் மாதத்தில் 6.6% வரை அதிகரித்துள்ளது.
அதேவேளை, உணவு அல்லா பணவீக்கமானது ஜூலை மாதத்தில் 9.2% ஆக பதிவாகியிருந்தது.
எனினும் ஒகஸ்ட் மாதத்தில் 9.3 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் போக்குவரத்துக்கான பணவீக்கமும் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 19.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஜூலை மாதத்தில் 18.9 சதவீதமாக காணப்பட்டதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது


