தற்போது ரயில்வே திணைக்களத்திடம் இயங்கும் நிலையில் உள்ள ரயில் என்ஜின்களின் எண்ணிக்கை 50 மாத்திரமே என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்தில் 98 ரயில் என்ஜின்கள் உள்ளபோதிலும், தற்போது 50 என்ஜின்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
ரயில் சேவைகளை வழமை போன்று நடத்திச் செல்வதற்கு 74 ரயில் என்ஜின்கள் தேவைப்படுகின்றன என்றும் அதில் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2024 ஆம் ஆண்டில் ரயில்வே திணைக்களத்திடம் இயங்கும் நிலையில் 53 ரயில் என்ஜின்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அலுவலக ரயில் சேவைகளுக்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரயில் வேகக் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 118 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்தமாக 242 வேகக் தொகுதிகள் உள்ள நிலையில், சேவைகளை வழமைபோல் முன்னெடுத்துச் செல்ல 193 தொகுதிகள் தேவைப்படுகின்றன.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் 258 தொகுதிகள் இருப்பில் இருந்ததாகவும், அக்காலப்பகுதியில் 148 தொகுதிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரயில் என்ஜின்கள் மற்றும் வேகக் தொகுதிகளின் குறைபாடு காரணமாக நாளாந்தம் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், சில என்ஜின்கள் மற்றும் வேகக் தொகுதிகளில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக ரயில்கள் தாமதமாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றது.
ரயில்வே திணைக்களத்தில் நிலவும் இந்த நிலைமை குறித்து பல தொழிற்சங்கங்கள் ரயில்வே பொது முகாமையாளருக்குத் தொடர்ச்சியாகத் தெளிவுபடுத்திய போதிலும், அவர் அதற்குச் சாதகமான பதிலளிப்பதில்லை என்றும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கமைய, தொடர்ச்சியாகப் பதிவாகும் இந்தப் பிரச்சினைகள் மற்றும் இதற்கு ரயில்வே பொது முகாமையாளர் காட்டும் அலட்சியம் காரணமாக, எதிர்வரும் 17ஆம் திகதி 27 ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையில், எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தமது சங்கமும் ஆதரவு வழங்கும் என இலங்கை பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர் உறுப்பினர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரும் கலந்துரையாடலொன்றை பல சந்தர்ப்பங்களில் கோரியபோதிலும், இதுவரையில் ரயில்வே பொது முகாமையாளர் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை என அந்த ஒன்றியத்தின் செயலாளர் அணில் குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பணிப்புறக்கணிப்பில் தாமும் இணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (14) நடைபெறவுள்ளது.
அதற்கமைய, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போக்குவரத்து அமைச்சில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது


