இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த தினங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்த தினங்களில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றைய தினமும் வாகன இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில், தமது இலக்கங்களுக்குரிய தினங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தாமதித்து எரிபொருள் கிடைக்கப்பெறுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.