பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது. பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி விசேட அறிவிப்பை வெளியிடுவார்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதி நேற்று (20) முன்மொழிந்தார்.
இதன்படி அனைவரின் ஆலோசனைகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளார். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பெயர் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
தினேஷ் குணவர்தன பிரதமரானால் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா அல்லது சுசில் பிரேமஜயந்த ஆகியோரில் ஒருவரை சபையின் சபாநாயகராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தொடர்ந்தும் செயற்படுவார் எனவும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையும் விரைவில் நியமிக்கப்படவுள்ளதுடன், அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை முப்பதுக்குள் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.