நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான உண்மைகளை கடந்த அரசாங்கம் மூடி மறைத்துள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க CNN தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறேன். நான் முந்தைய ஆட்சியாளர்களைப் போல் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும். நான் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு வந்துள்ளேன் என பதில் ஜனாதிபதி இங்கு கூறியுள்ளார்.
“இலங்கை தற்போது ஒரு திவாலான நாடாக உள்ளது, அது இப்போது செய்ய வேண்டியது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு உண்மையைக் கூறவில்லை. மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் பின்னோக்கி சென்றுள்ளோம். இதை கடக்க வேண்டும். எங்களுக்கு 5 அல்லது 10 ஆண்டுகள் தேவையில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாங்கள் நிலைபெறத் தொடங்குவோம். 2024 ஆம் ஆண்டுக்குள், வளர்ச்சி தொடங்கும் பொருளாதாரம் செயல்படும்.”
மேலும், இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷவிடம் பேசியதாகவும், அவர் சிங்கப்பூர் சென்றதாகவும், அவர் இன்னும் சிங்கப்பூரில்இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது இருக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.