எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து அகற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து அகற்றுமாறு பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற போதிலும், அத்தகைய தீர்மானம் விரைவில் எடுக்கப்படலாமென பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் S.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சில அரசியல் செயற்பாட்டாளர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் கலவரக் குழுக்கள் என்பன பல்வேறு சம்பவங்களை முன்னிறுத்தி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றமை தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த போதுமானளவு பொலிஸார் இன்மையால், முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொலிஸார் ஊடாக முன்னெடுத்து, தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் முப்படையினரின் ஒத்துழைப்பை பெறுமாறு அனைத்து பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய அமைதியின்மை சம்பவங்கள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.