இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போகளிலிருந்து தனியார் பஸ்கள் எரிபொருளை பெற்று அவற்றை விற்பனை செய்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போக்களில் தனியார் பஸ்களுக்கும் எரிபொருள் வழங்கப்படுகிறது.
தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்கும் போது போதிய அளவில் விநியோகம் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
எனினும் குறித்த அளவு பஸ் சங்கத்தினராலேயே தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்தும் அந்த அடிப்படையிலேயே எரிபொருள் வழங்கப்படுகிறது.
கடந்த தினங்களில் எரிபொருளை வழங்கிய பஸ் டிப்போகளில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவ்வாறு எரிபொருளை பெற்றுக் கொண்ட பஸ்கள் உரிய வீதிகளில் சேவையில் ஈடுபடுவதில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த பஸ்கள் ஊடாக எரிபொருள் விற்பனை அல்லது வேறு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தவிடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் பரிசீலனைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார்.