எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல் தனியார் பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாகவும்,அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை அதிகபட்ச கொள்ளளவுடன் சேவையினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் ரயில் ஊழியர்கள் தமது தனியார் வாகனங்களில் கடமைக்கு சமூகமளிப்பதறகு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில்சேவைகளில் தடைஏற்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.