குறுகிய கால மற்றும் நீண்ட காலத்தில் பலன் கிடைக்கும் அனைத்து வகையான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ள 400 உயர் அதிகாரிகளும் அவர்களின் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்களுக்கு பெற்றோல் நிறுவனங்களுடன் முற்பதிவு மேற்கொள்ள முடியாது எனவும், அந்த செயற்பாட்டை குறித்த அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
எனவே, இந்த மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான எரிபொருள் கொள்வனவு குறித்தான திட்டமிடல்களை நிறைவு செய்ய வேண்டுமெனவும் எரிசக்தி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தற்போது, எரிபொருள் வரிசையில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காகவே டோக்கன் வழங்கப்பட்டதாகவும், புதிதாக எரிபொருள் வரிசைக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கும் நோக்குடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், அடுத்த எரிபொருள் கப்பல்கள் வந்தவுடன் ஏதேனும் ஒரு முறைமையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் தயவு செய்து வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும், அவ்வாறு காத்திருப்பதாலேயே கறுப்பு சந்தையில் 1500 ரூபா வரையில் பலர் பெற்றோல் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபைக்கு முறையாக எரிபொருள் வழங்கப்படுவதாகவும், எந்தவொரு காரணத்திற்காகவும் 3 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக மின்வெட்டு அமுல்படுத்த வேண்டாமென தான் மின்சாரசபை தலைவருக்கு கோரியுள்ளதாக தெரிவித்த அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் மின்வெட்டை அமுல்படுத்தாமல் மக்களுக்கு மின் தடையை ஏற்படுத்தாமல் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும் சிந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.