இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கவுள்ளது.
இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது மருந்து, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.
இலங்கையில் உள்ள, 3 மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு, அவுஸ்திரேலியா உடனடியாக 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கவுள்ளது. இது சுகாதார சேவைகள் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடைகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுவதாக உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.