ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக அமையப்பெற்ற 7 நாடுகளின் குழு கலந்துரையாடலில் மே மாதம் 9ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது மாநாட்டில் இந்த குழுவின் சார்பாக அறிக்கை ஒன்றை வாசித்த, பிரித்தானியாவின் பிரதிநிதி ரிட்டா ஃப்ரென்ச், இலங்கை அண்மைக்காலமாக முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை அறிந்திருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் போராட்டங்கள், ஒன்று கூடல்கள் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமையும் வரவேற்கப்படுகிறது.
ஆனால் நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி அமைதி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணைநடத்தப்பட்டு, தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.
அத்துடன் நீண்டகாலமாக இலங்கையில் நிலவுகின்ற தண்டனைகளில் இருந்து தப்புகின்ற நிலைமை மற்றும் ஊழல்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.