கிளிநொச்சி – விவேகானந்தா நகர் பகுதியில் நேற்று பிற்பகல் 190 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குறித்த பகுதியில் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வந்துள்ளதாகவும், வியாபார நோக்கத்திற்காக என தெரிவித்து மன்னாரிலிருந்து அங்கு வந்து தங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 190 கிலோகிராம் எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி சுமார் 5 கோடி ரூபா என கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரையும், கஞ்சா பொதியையும், இதற்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு காரினையும் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.