கொலை செய்யப்பட்ட பண்டாரகம – அட்டுலுகமவைச் சேர்ந்த 09 வயதான சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று (30) இடம்பெறவுள்ளது. அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினரிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பரிசோதிக்கப்படுவதோடு போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, தொலைபேசி அலைவரிசைகளும் பரிசோதிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தற்போது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது தெரிய வந்துள்ளது.
அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கீரை தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.