21 அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 21 அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, வலுவான மற்றும் சக்திவாய்ந்த சட்டத்தை முன்மொழிவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிதி உள்ளிட்ட அதிகாரங்களை கையாள்வதற்கான குழுக்களை அமைக்கவும், அந்த குழுக்களுக்கு இளைஞர்களை நியமிக்கவும் தான் முன்மொழிவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய கவுன்சில் முன்மொழிவையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைச்சர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களை அழைத்து கலந்துரையாட தேசிய கவுன்சிலுக்கு அதிகாரங்கள் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி, அமைச்சரவை, தேசிய கவுன்சில் மற்றும் நாடாளுமன்ற குழுக்கள் ஆகியன நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய முன்மொழிவுகளை தான் பாராட்டுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.