பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டகோகம’ போராட்ட தளத்தில் போராட்டக்காரர்களுக்காக இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இரு கட்சிகளுக்குமிடையில் தொடர்பு கொள்ளும் வகையில் விசேட இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்கவும், தமது முன்மொழிவுகளை பிரதமரிடம் சமர்ப்பிக்கவும் இந்த இணையத்தளம் உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
‘கோட்டகோகம’ எதிர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட விஜேவர்தன, போராட்டக்காரர்கள் இப்போது pmoffice.gov.lk ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்றார்.
“நடைமுறை மற்றும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை முன்வைப்பவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதிக்கப்படுவார்கள். நான் போராட்டக்காரர்களுடன் இணைந்து அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் மற்றும் முறைமையை மாற்றுமாறு கோரி, ‘கோட்டாகோகம’வில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக 40 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.