வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழிற் பயிற்சி திட்டங்களை முன்னடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (25) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிலவுகின்ற பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில், அந்நியச் செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் மூலம், உயர் ஊதியம் பெறும் தொழில்களுக்கான வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியும்.