டெல்டா கொரோனா வைரஸ் பரவுவதற்கு இடங்கொடுக்கப்பட்டால், அந்த வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவுமென எச்சரிக்கும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், வைரஸ் பரவுவதற்கு இடங்கொடுக்காவிட்டால், வைரஸ் பரவாதெனவும் தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்றினால், வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் தெரிவித்த அவர், இல்லை என்றால், ஏனைய வைரஸ்களை விட டெல்டா வைரஸ் வேகமாகப் பரவும். இதனால் மோசமான விளைவுகள் ஏற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் தொற்றியவர்களுக்கு பெரும்பாலும் விசேடமான நோய் அறிகுறிகள் தென்படுவதில்லை. மாறாக சாதாரண நோய் அறிகுறிகளே தென்படும். எனினும் நோயால் கடுமையானப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள 193 நாடுகளில் 96 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொடர்பில் அமுலில் உள்ளக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, அதனை அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.