நாளாந்த எரிவாயு விநியோகத்தில் 60 வீதத்தை அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்குமாறு லிட்ரோ நிறுவனத்துக்கு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது.
எரிவாயு விநியோகம் தாமதமடைந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய கடன் திட்டத்தின் மூலம் எரிவாயு கொள்வனவுக்காக கிடைக்கப்பெறும் 120 மில்லியன் அமெரிக்க டொலரின் மூலம் எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் எனவும் கோப் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிவாயு இறக்குமதிக்காக உலக வங்கியின் ஊடாகவும் 80 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கபபெறவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் இதன்போது தெரிவித்துள்ளது.
மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை இணையத்தளம் மற்றும் கையடக்க தொலைபேசி வாயிலாக பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் லிட்ரோ நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கும் போது விலை அதிகரிக்கப்பட்டாலும், விலை குறைவடையும் போது அதன் பிரதிபலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கோப் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எரிவாயுவுக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.