நாடளாவிய ரீதியில் இன்று மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெசாக் பௌர்ணமி விடுமுறையினை முன்னிட்டு இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை நீடிக்கப்படவுள்ளதாக சில தரப்பினால் கூறப்படுகின்ற போதும், தற்போதைய தரவுகளுக்கமைய அவ்வாறு நீண்ட காலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதுமானளவு மழைவீழ்ச்சி பதிவாகின்ற நிலையில் எதிர்காலத்தில் அதிக மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக எதிர் வரும் 2 முதல் 3 மாதங்களுக்கு 10 முதல் 12 மணி நேர மின் விநியோகத்தடை அமுல்படுத்துவதற்கான அவசியம் ஏற்படாது எனவும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை 4 இலட்சம் மெட்ரிக்டொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் , இன்றைய தினம் தினம் எரிவாயு அடங்கிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள குறித்த எரிவாயு கப்பலில் இருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 19 ஆம் திகதி எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.