முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இன்று (10) தெரிவித்தார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக பல வதந்திகள் பரவுகின்றன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அவர் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
“எனது தந்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் எனவும் அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு என்று தனது குடும்பத்தினர் நம்புவதாகவும் தாங்கள் எப்போதும் எமது மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.