ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் பலத்தை பிரயோகித்தபோது ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் திலகரத்னவுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும், மூன்று நாட்களுக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஹிரிவடுன்ன, நாரன்பெத்த பகுதியைச் சேர்ந்த கே. பி. சமிந்த லக்ஷான் என்பவர் பலியானார்.
உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை இன்று (22) தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்னபகுதியில் இடம்பெறவுள்ளது.
இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.