இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இளைஞர்களின் தலைமையிலான நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவு பகலாக கொட்டும் மழையை பொறுப்படுத்தாது ஐனாதிபதி பதவி விலகவேண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பிவருகின்றனர்.
சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டுக்கடன் செலுத்தவேண்டி உள்ளதுடன் அதில் 7 பில்லியன் டொலர் இவ்வாண்டு செலுத்தவேண்டியுள்ளது.
மேலும் வெளிநாட்டு இருப்புக்கள் குறைந்து வருவதினால் இலங்கை திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அரசாங்கம் உணவு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்துகொள்வதற்காக சீனா மற்றும் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருள், சமையல் எரிவாயு, உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் பல மணி நேரம் மின் தடையும் ஏற்படுகிறது.
இந்த அத்தியவசிய பொருட்களில் பெரும்பாலனவை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன் அதற்கு தேவையான டொலர் இன்மை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில் கடந்த இரு தசாப்தமாக அரசாங்கத்தின் உயரிய பதவிகளில் வசித்துவந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக திரும்பியுள்ளன.
மேலும் இலாப நோக்கற்ற திட்டங்களில் மக்களின் பணங்களை முதலிட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்ட காரர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.