இன்று முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.
பொது மக்கள் எரிபொருளை அதிகம் சேமித்து வைப்பதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ் சிங்கள புதுவருட காலத்தில் மின்விநியோகத்தினை தடையின்றி வழங்க எரிபொருள் தேவைப்படுவதனாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த அறிவிப்பினை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு எரிபொருள் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் கொள்வனவுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மண்ணெண்ணெயை வழமை போன்று கொள்வனவு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.