IOC நிறுவனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கொள்வனவு செய்தமை ஊடாக 57 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள போதும், மேலும் 12 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலினை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
டீசல் ஒரு லீற்றருக்கு 290 ரூபா 98 சதத்தினை இலங்கை மின்சார சபைக்கு செலுத்தியதன் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னதாக 12 தடவைகள் IOC நிறுவனத்திடமிருந்து இலங்கை மின்சார சபை எரிபொருள் கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் கொள்வனவு செய்யப்படவுள்ள 12 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருள் தொகையானது அதிக விலையில் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாக பெறப்படும் எரிபொருள் கையிருப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத நிலையில், மின்சார சபைக்கு பாரிய நட்டம் ஏற்படுமெனவும் எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 30 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கொள்கலன் கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.