தான் தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பதாக அலி சப்ரி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 4 புதிய அமைச்சர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த போதே நிதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொறுப்பை ஏற்று செயற்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் யாரும் அதனை ஏற்க முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாட்டின் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு தன்னால் முடிந்த அளவு இந்த பதவியில் கடமை புரியவுள்ளதாகவும், எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் அதனை ஏற்று செயற்பட தான் தயாராக உள்ளதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.