பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்வதற்கு சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும், அவர்கள் வகித்த பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாத்து, முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளதால், பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இது குறித்து தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைய, பிரதி சபாநாயகர் பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.