கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முற்பகல் வேளையிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
Standard & Poor’s Sri Lanka 20 பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் 10 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தமையினால் இவ்வாறு கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் உரிய நேரத்துக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய Standard & Poor’s Sri Lanka 20 பங்கு விலைச்சுட்டெண் 10 தசம் 39 புள்ளிகளினால் அதாவது 314 தசம் 96 புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 2 ஆயிரத்து 716 தசம் 20 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6 தசம் 20 புள்ளிகளினால், அதாவது 552 தசம் 18 புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 8 ஆயிரத்து 351 தசம் 69 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் இன்று 2 கோடியே 55 இலட்சத்து 20 ஆயிரத்து 13 பங்குகள் பரிமாறப்பட்டுள்ளதுடன், பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 125 கோடியே 57 இலட்சத்து 59 ஆயிரத்து 330 ரூபா 60 சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.