பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் நேற்று (29) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த யு.ஜி.எஸ்.சசங்க (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொறியியல் பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை இந்த நாட்களில் இடம்பெற்று வருகின்றது. இறுதிப் பரீட்சையில் தோற்ற மாணவன் வராததால், அவரது நண்பர்கள் அவரது தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய போது, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
மாணவன் தங்கியிருந்த விடுதி அறைக்கு நண்பர்கள் இருவர் தேடிச்சென்ற போது, மாணவன் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.
அவரது மேசையில் தற்கொலைக்கு முன்னர் குறிப்பொன்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.
மன்னிக்கவும், இந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. என் சாவுக்கு யாரும் காரணமில்லை என சிறு காகித துண்டில் அந்த குறிப்பு எழுத்ப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.