இலங்கையில் முதல் தடவையாக கொலன்னாவையில் அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் தடவையாக வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம் , வருடம் தோறும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும் தொகையான பணத்தை சேமிக்க முடியும்.
உள்ளூர் தனியார் நிறுவனம் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும், வாகன இலக்கத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ளதுடன், அதன் பின்னர் அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தினால் இந்த இலக்கத் தகடுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு வருடமும் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் வருடாந்தம் குறைந்தது 10 இலட்சம் இலக்கத் தகடுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் , சுமார் 600 மில்லியன் ரூபாவினை வெளிநாட்டுக்கு செல்லவிடாமல் சேமிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.