இரட்டை குடியுரிமையை இரத்து செய்வதற்கான அரசியல் யாப்பு திருத்தத்தை தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ளதாக முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் 19ஆம் திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட சகல குறைப்பாடுகளும் இதில் திருத்தப்படும்.
19ஆம் திருத்தத்திற்கு அமைய இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ செயற்பட முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னணியிலேயே அவலட்சன அமெரிக்கர் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டார்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் வகிப்பதற்கு பிரச்சினை இல்லாததன் காரணமாகவே சோனியா காந்தியிடம் கற்றுக் கொண்ட பாடங்களை இலங்கையில் செயற்படுத்த முடியுமாக இருந்தது.
எனவே, நீதித்துறை, தூதரக சேவைகள் மற்றும் பரிபாலன சேவைகள் உள்ளிட்டவற்றில் உயர் பதவியை வகிப்பதற்கு இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவருக்கு முடியாமல் செய்யக் கூடிய அரசியல் யாப்பு திருத்தம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை இல்லாது செய்வதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர்.அந்த எண்ணிக்கை 36ஆக மாறும் வரை காத்திருக்கிறோம்.
மோசமான நிலைமைக்கு தயாராக இருக்கின்றோம்.இறுதியில் எவர் என்ன கூறினாலும் மக்களே தீர்மானத்தை மேற்கொள்வர்.
அன்று எமக்கிருந்த மக்கள் கூட்டத்தை காட்டியதன் பின்னர் மைத்ரிபால சிறிசேனவுடன் இருந்தவர்களில் ஒவ்வொருவராக எம்மோடு இணைந்தனர்.
எனவே, தற்போதைய நிலை தொடர்பில் மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
மீண்டும் மக்கள் கூட்டத்தை காட்டியதன் பின்னர் எவரும் ஆட்சியாளர்களுக்கு அச்சமடைய மாட்டார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.