பதுக்கப்பட்டுள்ள எரிவாயு இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் இடங்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளது. சில பகுதிகளில் எரிவாயு விற்பனை முகவர்கள் எரிவாயு கொள்கலன் கையிருப்பை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் சில எரிவாயு விற்பனை முகவர்கள் எரிவாயு அடங்கிய கொள்கலன்களை 4,500 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்வதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளது. சில எரிவாயு விநியோகஸ்தர்களின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் எரிவாயு நிறுவனங்கள் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.