அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்திருந்தது.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்டிருப்பதால் அந்த மாநாட்டை புறக்கணித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் தமக்கு அமைச்சுப் பதவியை கோரியதாகவும் அதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவித்த நிலையிலேயே சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த தகவலும் உண்மைக்கு புறம்பானது என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஜனாதிபதியுடன் கரிசனைக்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஜீவன் தொண்டமானை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.