தேவையான அளவு எரிபொருளை மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக் கொள்ளுமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே பொது மக்களிடம் கோரியுள்ளார்.இது தொடர்பில் கேள்வி அதிகரித்துள்ளதன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகவும் எதிர்வரும் இரண்டு நாட்களில் அந்த நிலை சரிசெய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் தாங்கி ஊர்திகளுக்கான எரிபொருள் இன்மையால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.அகில இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இலங்கை கனியவள மொத்த களஞ்சிய முனையத்திற்கு அறியப்படுத்தியமையை அடுத்து அதற்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து அவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.இவ்வாறான பின்னணியில் இன்றைய தினமும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.