இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், இந்திய அரசாங்கம் செய்த இந்த உதவியை ஒருபோதும் இலங்கை மறக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் பாரிய சிக்கலை சந்தித்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய டொலர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இருக்கும் இலங்கைக்கு, இந்தியா நேற்றைய தினம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது.
இலங்கை வீழ்ச்சியின் விழிம்பில் இருக்கும் போது நாட்டை மீட்க செய்யப்படும் உதவியானது உலக அளவிற்கு பெரிதாக மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்