இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் தேசிய அரசாங்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த தேசிய அரசாங்கத்தில் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான தனது கருத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச வெளியிட்டுள்ளார்.
கோவிட் தொற்று நோய் காலத்திலேயே தேசிய இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.அந்த நேரத்தில் சர்வக் கட்சி மாநாட்டை நடத்துமாறு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை. அது நடந்து இருந்தால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அதனை பயன்படுத்தி இருக்கலாம்.
எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டின் நிலைமை தற்போது படு மோசமாக மாறியுள்ளது. இதனால், இப்படியான நேரத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது பெரும் மூடத்தனமான செயலாக உள்ளது.
தேசிய அரசாங்கம் ஒன்றை தற்போது அமைக்க முடியாது என நம்புகிறேன். நாட்டின் இன்றைய சூழ்நிலையில், தேசிய அரசாங்கத்தில் இணைய வரும் முட்டாள்கள் யார் என்பதை சிந்திக்கின்றேன். அப்படியான முட்டாள்கள் இருந்தால், தேசிய அரசாங்கம் அமையும் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.