எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமை மோசமடைந்து வருவதால், டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாகனங்களில் நான்கில் ஒரு பங்கை மாத்திரமே இயக்க முடிந்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் தீர்ந்துபோவதால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் நிரப்புவதற்காக சாரதிகள் சுமார் ஏழு மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதோடு பஸ் உரிமையாளர்கள் எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளதால், பல பயணிகள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய கார்களைப் பயன்படுத்துவதை நகரம் முழுவதும் காணக்கூடியதாக உள்ளது.
“இன்றும் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் இன்னும் டீசல் இல்லை என்று நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில வேளை டீசல் விலை உயரும் என நினைத்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாலையில் டீசலை விநியோகம் செய்வததை நிருத்தி இருக்கலாம். கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் ரூ. 2000, ரூ. 3000 மற்றும் ரூ.5000 என பல்வேறு விலைகளில் டீசல் விற்பனை செய்யப்படுவதால், பஸ் சேவையை தொடர முடியாது உள்ளதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக” இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.