சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை என கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே அரசாங்கத்தின் இந்த திட்டமிடப்பட்ட சதியாகும்.

இதற்கு விவசாயிகள் ஒரு போதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என நுவரெலியா விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் , சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (05) காலை நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள கவிதாஸ் திடலிற்கு முன்பாக கூடி நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுசில்சாந்த, செயலாளர் அருணசாந்த, உறுப்பினர் சந்தியராஜன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், ஜக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் கிருசாந்த கீகனகே உட்பட பலரும் கலந்து கொண்டனர்.