நுவரெலியாவில் இன்று காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.நானுஓயா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மாத்திரம் விநியோகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னும் தேவைக்கேற்ற விநியோகம் இல்லை என வாகனச் சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு வாகனச் சாரதியும் எரிபொருள் நிரப்புவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதன் காரணமாக நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நுவரெலியா – பதுளை பிரதான வீதியை ஒருவழிப்பாதையாக மாற்றியுள்ளனர்.
வாகனச் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் வாகனச் சாரதிகள் நீண்ட தூரம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளைக் கொண்டுசெல்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.