இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும் சிறுவர்களுக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை கொண்டு சேர்த்து அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியை வழங்கி வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் நாடாளாவிய ரீதியில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்ட போட்டிகளில் பங்குகொள்ளும் பாடசாலைகளுக்கு இத்திட்டத்தினூடாக கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படுகின்றது.
இந்தத் திட்டத்தில் 19 வயதிற்குட்பட்ட ஐம்பது மகளிர் பாடசாலைகள் ரேடியாக பயனடையவுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் துணைத் தலைவர் மதிவாணன் கருத்து தெரிவிக்கையில் ,இந்த நடவடிக்கை சிறப்பானது என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கிரிக்கெட் உபகரணங்களை வாங்க முடியாத பாடசாலை மாணவர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் பாரிய நன்மை தருவதாக தெரிவித்தார். ‘இலங்கையில் உள்ள 650 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த நடவடிக்கை சிறப்பானதாகும்.
நான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பாடசாலை கிரிக்கெட் பொறுப்பாளராக இருந்த போதும் கிரிக்கெட் உபகரணங்கள் பெற்றுக்கொள்ள வசதியற்ற சில பாடசாலைகளுக்கு இது போன்று நன்கொடைகளை வழங்கினோம். குறைவான வளங்களை கொண்ட பாடசாலைகளுக்கு குறித்த செயற்த்திட்டம் பாடசாலை மாணவர்களின் கிரிக்கெட் விளையாட்டை மேலும் சிறப்படைய செய்யும் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.