இலங்கையில் இனவழிப்பு ஒன்று இடம்பெற்றதாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறியிருப்பதாகவும், ஆனால் அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என்றும் நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் பொன்சேகா கூறினார்.
இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக எந்த அழிவினையும் மேற்கொள்ளவில்லை.அவ்வாறு மேற்கொண்டிருந்தால், யுத்தம் நிறைவடைந்த ஒரு வருடத்திலேயே நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதி ஒருவருக்குத் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகளை விடவும் அதிகமான வாக்குகளை வழங்கி இருக்க மாட்டார்கள்.
இதன்மூலம், தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்தினர் செயற்பட்டனர் என்ற கருத்தைத் தமிழ் மக்கள் நம்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பின் வரிசை இராணுவ உறுப்பினர்கள் சிலர், ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற ஐயம் தமக்கு இருந்தது.
இராணுவத்தினரை அவப்பெயருக்கு உட்படுத்தாதிருக்க அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் சரத் பொன்சேகா அறிவித்தார்.