யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் தமக்கு வழங்கப்படும் 6000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், நிரந்தர நியமனம் வழங்க கோரியும், நீண்ட காலமாகத் தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்றி வருவதாகவும், எனவே இந்த அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரிடம் முன்பள்ளி ஆசிரியர்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு வவுனியாவிற்குச் சென்றதன் காரணமாக இன்றைய தினம் சந்திக்க முடியாது என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்ததாக ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்ற முன்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஆளுநரின் செயலாளர் தம்மை வந்து சந்திக்க வேண்டும் எனக்கோரித் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.