தெரிவு செய்யப்பட்ட 115, 867 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவினை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் கடந்த மாதம் 18ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘பொதுமக்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார சிரமங்களை குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் என்ற தலைப்பின் கீழ் குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த முன்மொழிவுகளில் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பரிந்துரைகளுக்கு அமைய 115, 867 குடும்பங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவை சலுகை விலையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.