சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுறுத்தியுள்ளார்.
பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்கு இன்று அதிகாலை 2.10 அளவில் பிரவேசித்த நான்கு பேர் கொண்ட குழுவினால் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் வீட்டின் மீது கற்கள் மற்றும் கழிவுகள் அடங்கிய பொதிகளை வீசி தாக்கியதாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.
கல்கிசை பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 3 பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.