யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், ‘வவுனியா பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றும் போது,
“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.நாடொன்று பலமடைய வேண்டுமாயின், நாட்டினது கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும்.அதுவே, பயனுள்ள முதலீடாகும்.
தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது.பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
‘உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும் வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை.எப்போதும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு பெரும் ஊன்றுகோலாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.