புதிய களனிப் பாலம் மற்றும் துறைமுக அணுகல் மேம்பால அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்புப் பகுதியின் நிர்மாணப் பணிகள் காரணமாக, இங்குருகட இடைமாறல் வழியின் (Ingurukade Interchange) உள்நுழையும் மற்றும் வெளியேறும் பாதைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (23) முதல் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில், பல்வேறு நேரங்களில் இந்த பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிவித்தலுக்கமைய, கட்டுநாயக்க மற்றும் கண்டி திசைகளிலிருந்து இங்குருகட சந்தி அல்லது கொழும்புத் துறைமுகம் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் பேலியகொட அல்லது ஒருகொடவத்த வெளியேறும் வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஒருகொடவத்த திசையிலிருந்து கொழும்புத் துறைமுகம் அல்லது இங்குருகடை சந்தி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், புதிய களனிப் பாலப் பகுதியிலுள்ள வீதி ஊடாகப் பேலியகொட நுழைவாயிலைப் பயன்படுத்த வேண்டும்.
பொரளை திசை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் புதிய களனிப் பாலப் பகுதியிலுள்ள தரைமட்ட வீதியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


