லாஃப்ஸ் ​நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டமை தொடர்பில் உரிய காரணங்களைக் கோரி விளக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 

அதற்கமைய, இது குறித்த விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்காக லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (16) காலை 10 மணிக்கு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்துள்ளது.

 

கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்களின் விலைகளைத் திடீரென உயர்த்த அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

 

இதன் அடிப்படையில், 4,965 ரூபாவாக விற்கப்பட்டு வந்த 12.5 கிலோகிராம் வீட்டு பாவனை எரிவாயு சிலிண்டரின் மீள் நிரப்பல் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 6,740 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

 

அதேநேரம், 1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் வீட்டு பாவனை எரிவாயு சிலிண்டரின் மீள் நிரப்பல் விலையும் 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது 2,720 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

 

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்கள், கப்பற் கட்டணங்கள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளமையால், நாட்டுக்கு எரிவாயு தொகையைக் கொள்வனவு செய்வதற்கான மொத்தச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நலின் குருக்குலசூரிய அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இத்தகைய தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே எரிவாயு விலையைத் திருத்தவேண்டி ஏற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு...