சவூதி அரேபியாவில் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையானது, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சவூதி உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர புதன்கிழமை (15) தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர ஈடுபாடு, தூதரக உதவி மற்றும் இலங்கை – சவூதி சட்ட வல்லுநர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் சிவராசாவிற்கு சட்டப்பூர்வ நிவாரணங்களைப் பெற இலங்கை அரசு எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகப் பதிவு ஒன்று தொடர்பாக அவருக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
ஹேமச்சந்திரவின் கூற்றுப்படி, சவூதி உச்ச நீதிமன்றம் ஒக்டோபர் 13 அன்று மரண தண்டனைத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யத் தீர்மானித்தது; இதனையடுத்தே முந்தைய தீர்ப்பின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனை நீக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், இலங்கை அரசு பல வழிகளில் இவ்விவகாரத்தை முன்னெடுத்தது. இலங்கை அதிகாரிகள் தொடர்புடைய சவூதி அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இவழக்கை ராஜதந்திர, தூதரக மற்றும் சட்ட வழிகள் மூலம் கையாண்டனர்.


