தங்களது போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துவது தொடர்பாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் (CPC) தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் நேற்று (2) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண உயர்வு முறைமை மற்றும் சூத்திரம் குறித்து மேலும் ஆராய்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் பெறப்பட்டுள்ளதாக, பேச்சுவார்த்தையின் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. எம். எச். அதிகாரி இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், தங்களது கோரிக்கைகள் மற்றும் யோசனைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் பல சாதகமான தீர்வுகள் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
டீசல் விலை, டயர்கள், பெட்டரிகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செலவுகளையும் கருத்தில் கொண்டு நியாயமான கட்டணத் திருத்தத்தை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தங்களது கணிப்புகளின்படி சராசரியாக 20% போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொரட்டுவ பல்கலைக்கழகம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பவுசர் உரிமையாளர்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், புதிய சூத்திரத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு திங்கட்கிழமை வரை தற்காலிகமாக அவகாசம் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


